அரசு மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும் என தமிழக அரசு தெரிவித்திருந்ததோடு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரியில் இதேபோன்று 'சரக் சப்த்' எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் மதுரையில் நிகழ்ந்தது போல் அங்கும் சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் டீன் அல்லி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த விளக்கத்தில், ''கடந்த மார்ச் 11 ஆம் தேதி 'வைட் கோட் செர்மனி' நடத்தினோம். அதில் நாங்கள் மூன்று வகையான உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம். இப்போகிரேடிக் உறுதிமொழி, சரக் சப்த், உடற்கூறியல் தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்'' என்றார்.