கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு மற்றும் இதர திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்கள் இருந்தன. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவண்குமார் ஜடாவத் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் கடந்த 19-12-2022 அன்று சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் அதிக முறைகேடு நடந்திருப்பதாகவும் மற்றும் தீர்மான பதிவேடு, தெரு மின்விளக்கு பராமரிப்பில் அதிக செலவினம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1 முதல் 31 வரை ஊராட்சி பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்காதது மற்றும் சீட்டுகள் (ரசீதுகள்) இல்லாமல் செலவினங்கள் செய்தது கண்டறியப்பட்டது. இந்த கடும் குறைபாடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு ஊராட்சி சட்டப் பிரிவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் ஊராட்சி பணிகளையும் ஊராட்சி கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் மூக்கனூர் ஊராட்சி செயலாளர் செல்லத்துரை என்பவரை தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் ஜடாவத் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் இப்பணிகளை கவனிக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு அக்கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், கோயில் சாமிகளுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தும் கொண்டாடி உள்ளனர்.