புவனகிரி பேரூராட்சியில் பணியாற்றும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் 17 பேரை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியதாகவும், இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் அவர்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சதானந்தம் உள்ளிட்டவர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த புவனகிரி வட்டாட்சியர் சிவகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர்களை அழைத்து, இது குறித்து விபரம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், தற்போது என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.