இன்று குளித்தலையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல்தட்டை மணல் குவாரிகளுக்கு எதிராக கடை அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சியின் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குளித்தலையில் உள்ள முக்கிய வீதிகளில் கடைகளை அடைத்து பொதுமக்கள் மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன், இந்த சட்ட விரோத மணல் குவாரிக்கு எதிராக 100 சதவீத மக்கள் தங்கள் ஆதரவை கொடுத்திருக்கிறார்கள் . காவிரியில் மணல் இருந்தால் தான் மனிதன் உயிர் வாழ முடியும். இந்த மணல் குவாரி இயங்கினால் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே இப்போதாவது தமிழக அரசு உணர்ந்து இந்த சட்ட விரோத குவாரியை மூட வேண்டும் என்றார். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் இனி காவிரிக்கு தண்ணீர் வருமா என்பதே சந்தேகம் தான். இந்த நிலையில் தற்போது உள்ள மணல் குவாரிகளை உடனே மூட உத்தரவிட வேண்டும் என்றார்.