சுகாதாரச் சீர்கேடு, திறந்தவெளி கழிப்பிடம், வடிகால் வசதியின்மை என முற்றிலும் செயல் இழந்து காணப்படும் சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகரில் இறைச்சிக் கடைகளில் திறந்தவெளியில் ஆடுகள் வெட்டப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. பல நேரங்களில், நோய்வாய்ப்பட்ட ஆடுகளும் இறைச்சி சந்தையில் பணமாக்கப்பட்டு விடுகின்றன. இதனால், இறைச்சி உண்போருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் இருந்தும் புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த திமுக ஆட்சியின்போது ஆடுகளை வெட்டுவதற்காக பிரத்யேக இறைச்சிக்கூடங்கள் கட்டப்பட்டன.
சேலம் மணியனூரில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இறைச்சிக்கூடம் (ஸ்லாட்டர் ஹவுஸ்) கடந்த 7.7.2010ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு கொண்டு வரப்படும் ஆடுகள், கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே, அறுப்புக்கு அனுமதிக்கப்படும். இதற்காக ஓர் ஆட்டுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாருக்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இறைச்சிக்கூடத்தில், ஆடு வெட்டுவதற்காக தனித்தனியாக ஆறு சிறு அறைகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், நுரையீரல், கல்லீரல், கொழுப்பு, மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சேகரிக்கவும், இரைப்பை, குடல் கறி சேகரிக்கவும், தோல் சேகரிக்கவும் என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்த இறைச்சிக்கூடம் திறக்கப்பட்ட புதிதில் ஒரே வாரத்தில் அதிகபட்சமாக 504 ஆடுகள் வெட்டப்பட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அதன்பிறகு ஐந்து ஆண்டுகளாக இந்த இறைச்சிக்கூடத்திற்கு ஆடுகளைக் கொண்டு வந்து வெட்டிச் செல்வது படிப்படியாக குறைந்துள்ளது. அதிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இந்த இறைச்சிக்கூடத்தில் ஒருவர்கூட ஆடுகளை அறுப்புக்குக் கொண்டு வரவில்லை என்கிறது இறைச்சிக்கூட பதிவேடு.
அதேநேரம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் அள்ளப்பயன்படுத்தி வரும் மூன்று சக்கர பேட்டரி வண்டிகள் நிறுத்தி வைக்கப்படும் 'பார்க்கிங்' இடமாக உருமாறியிருக்கிறது மணியனூர் இறைச்சிக்கூடம். இதில் சோகம் என்னவெனில், சிதிலமடைந்த ஏழு குப்பை லாரிகளையும், டம்பர் பெட்டிகளும் வைக்கும் கிடங்காக மாற்றியுள்ளனர்.
இந்தக் கூடத்தின் முழு சுற்றுப்புறமும் புதர் மண்டிக்கிடக்கிறது. சிதிலமடைந்த ஓர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது செடிகொடிகள் படர்ந்து மூடியிருக்கின்றன. முல்லை க்குத் தேர் கொடுத்த பாரி போல, புதரில் முளைத்திருந்த கொடிகள் படர ஆம்புலன்ஸ் வாகனத்தையே தானமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. மாநகர் முழுக்க டெங்கு கொசு ஒ-ழிப்புப் பணிகளை வீடு வீடாக ஆய்வு செய்வதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருவதை நாம் மறுக்க முடியாது. அதேநேரம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக்கூடத்தையே சரியாக பராமரிக்காமல், மாநகரத்திற்கு பரப்ப கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி இருப்பதில் எங்கனம் நியாயம் ஆகும்?
நாம் இந்த கூடத்திற்கு சென்றபோதுகூட ஓர் அறையில் குளோரின் மருந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதே அறையில் களைப்பில் இரு துப்புரவு ஊழியர்கள் பகல் நேரத்திலேயே கொசுவத்தி சுருள் கொளுத்தி வைத்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளில் மாநகராட்சி கமிஷனர் சதீஸின் அதிரடி நடவடிக்கைகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால், மணியனூர் இறைச்சிக்கூடத்தை ஒட்டியுள்ள காலி இடத்தை, பகல் நேரத்திலேயே குடிகாரர்கள் திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்தி வருவதும், பிளாஸ்டிக் குவளைகள், காலி மதுபுட்டிகளை கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டுச் செல்வதால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்துக்கொண்டு நிற்பதையும் கமிஷனரின் கவனத்திற்கு வராமல் போனது ஏனோ?
இத்தனைக்கும் இறைச்சிக்கூடத்திற்கு அருகிலேயே மாநகராட்சி மருத்துவமனை, அங்கன்வாடி மையம், மாநகராட்சிப்பள்ளி ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. முற்றிலும் சுகாதாரமற்ற இறைச்சிக்கூடத்தில் இருந்து கிளம்பும் கொசுக்களால், அங்கன்வாடி குழந்தைகளின் உடல்நலமும் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
இதுகுறித்து தாதகாப்பட்டியைச் சேர்ந்த பாஜக முன்னாள் கிளைத்தலைவர் சிவராமன் நம்மிடம், ''மணியனூர் இறைச்சிக்கூடம் கடந்த சில வருடங்களாகவே செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. செயல்படாத இறைச்சிக்கூடத்திற்கு ஒப்பந்தம் மட்டும் விடப்படுவது எப்படி என்று தெரியவில்லை. இப்போது இந்த இடம், பழைய இரும்பு சாமான்கள், குப்பைகள், தூக்கி வீசப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பழுதடைந்த வாகனங்களை போட்டு வைக்கும் கிடங்காக மாற்றி விட்டனர்.
அறுப்புக்கு ஆடுகள் கொண்டு வரப்படும்போது அதை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்குத் தெரிந்து, இந்த மையத்தில் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டதில்லை. ஆரம்பத்தில், சுகாதார ஆய்வாளர் ஒருவரை வைத்து ஆடுகளை பரிசோதனை செய்து வந்தனர். ஆடுகளை நோய் தாக்கி இருக்கிறதா என்பது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு என்ன தெரியும்?
இந்த கூடத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீர் பாசம் படிந்து கிடக்கிறது. டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியிருக்கிறது இந்த இறைச்சிக்கூடம். இந்த லட்சணத்தில் சேலம் மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, சுதந்திரதின விழாவில் முதல்வர் கையால் விருது வழங்கப்படுகிறது. 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது.
இன்னும் இந்த மாநகரில் திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கப்படவில்லை. மழை வந்தால் நகரமே நாறி விடுகிறது. முற்றிலும் சுகாதாரம் செயல் இழந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தவறான புள்ளி விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து நம்ப வைத்துவிட்டதோ என்று சந்தேகம் எழுகிறது. அல்லது, முதல்வர் சொந்த மாவட்ட மாநகராட்சி என்பதால் சுய விருப்பத்தின்பேரில் விருதுக்கு தேர்வு செய்தாரா என்பதும் சந்தேகமாக உள்ளது,'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க, மணியனூர் இறைச்சிக்கூடத்தை அதிமுகவைச் சேர்ந்த விநாயகம் என்பவர் மீண்டும் 8 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ''கொண்டலாம்பட்டி மண்டல சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் என்பவர், பழைய குப்பை வண்டிகளையும், பேட்டரி வண்டிகளையும் இறைச்சிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் துர்நாற்றம் வீசுவதால், யாரும் ஆடுகளை வெட்ட வருவதில்லை. அந்த வண்டிகளை அப்புறப்படுத்துமாறு பலமுறை சித்தேஸ்வரனிடமும், கமிஷனரிடமும் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கூடத்தை ஒப்பந்தம் எடுத்ததில் எங்களுக்கு நஷ்டம்தான்,'' என்றார்.
ஆனால் சித்தேஸ்வரனோ, ''இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த குப்பை லாரிகள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. அதனால் நிறுத்தி வைத்திருக்கிறோம். பேட்டரி வண்டிகளை சில நாள்களில் அகற்றி விடுவோம். இந்த இறைச்சிக்கூடத்தை முன்மாதிரி கூடமாக மாற்றும் திட்டம் உள்ளது,'' என்றார்.
இது தொடர்பாக நாம் சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபனிடம் பேசினோம்.
''மணியனூர் இறைச்சிக்கூடத்தில் நவீனமுறையில் ஆடுகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், எலக்ட்ரிகல் ஷாக் கொடுக்கும் வெட்டப்பட்டு வந்தது. இந்த முறையால் ஆட்டு ரத்தம் பெரிய அளவில் சேகரம் ஆகாது. அதனால் இறைச்சிக்கடைக்காரர்கள் இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் விரும்பாததால் ஓராண்டுக்கும் மேலாக யாரும் ஆடுகளை வெட்டுவதற்குக் கொண்டு வருவதில்லை.
மாநகரில் உள்ள பல இறைச்சிக் கடைக்காரர்களுக்கு, இறைச்சிக்கூடத்திற்கு வந்துதான் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருக்கிறோம். இதுவரை மாநகராட்சிக்கென கால்நடை மருத்துவர் பணியிடம் ஒதுக்கப்படாததால், மணியனூர் இறைச்சிக்கூடத்தில் கால்நடை மருத்துவரை நியமிக்கவில்லை,'' என்றார் மாநகர நல அலுவலர் பார்த்திபன்.
இறைச்சிக் கடைக்காரர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''சார்.... கறி, குடல் கறி, ஆட்டு ரத்தம் வாங்குவதற்காக காலை நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் கையில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர். ஆனால், மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் சென்று ஆடுகளை வெட்டி கறியை எடுத்து வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. அவ்வளவு நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதில்லை. அதனால்தான் பலர் மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் செல்வதில்லை,'' என்றார்கள்.
சேலம் மாநகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் இடத்தை சீர்கேடு அடையாமல் காப்பதும் மாநகராட்சியின் பொறுப்புதானே?