"மண்வளம் இருந்தால் தான் விவசாயம் வளம் பெற முடியும். ஆதலின் எங்களது கிராமத்திலிருந்து ஒரு பிடி மண்ணையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம்." எனச் சிராவயல் புதூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து மண் அள்ள வந்த பொக்லைன் இந்திரங்களைச் சிறைப் பிடித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ரூ.750 கோடி மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து மேலூர் வரையிலான 45 கி.மீ நாற்கர சாலை அமைத்துத் தரும் பணியினை எடுத்துள்ளது ஆந்திராவினைச் சேர்ந்த ஜே.எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம். இந்தச் சாலைப்பணிக்காக அமைச்சர் ஒருவர் தலையீட்டின் பேரில் குறிப்பிட்ட அளவு கி.மீ.தூரத்திற்குக் கண்மாய் மண் நிரப்பும் ஒப்பந்தம் புதுக்கோட்டையினைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இந்த நிறுவனத்திற்காக திருப்புத்தூர் தாலுகாவினைச் சேர்ந்த சிராவயல் புதூர் பஞ்சாயத்திலுள்ள 16 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட செட்டிக்குளம் கண்மாயில் மண் எடுக்க, நிபந்தனையின் அடிப்படையில் மண் எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தது மாவட்ட நிர்வாகம்.
இந்நிலையில், இன்று (02/07/2020) செட்டிக்குளம் கண்மாய்ப் பகுதிக்குச் சென்ற இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மண் எடுக்கும் பணியைத் துவங்கியது. இந்தத் தகவல் கிராம மக்கள் முழுவதிற்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களது கிராமத்திலிருந்து ஒரு பிடி மண்ணையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் பொக்லைன் இயந்திரங்களைச் சிறைப் பிடித்து போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினரும், காவல்துறையினரும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளனர். எனினும் முடிவு எட்டப் பெறாததால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.