காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, சி.ஐ.டி.யு. சார்பில் தொழிற்சங்கம் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், ‘தங்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் சாம்சங் நிறுவனத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தங்கள் நிறுவனத்தின் பெயரைத் தொழிற்சங்கத்திற்குப் பயன்படுத்தக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா அமர்வில் இன்று (22.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது சாம்சங் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் வாதிடுகையில், “தொழிற்சங்கம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தங்களுடைய நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல.
தங்கள் நிறுவன பெயரைப் பயன்படுத்தாமல் வேறு பெயரில் தொழிற்சங்கம் தொடங்கிக்கொள்ளலாம். தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதிடுகையில், “தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது அடிப்படை உரிமை. கொரியாவில் கூட சாம்சங் பெயரைப் பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது” எனத் தெரிவித்தார். இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்கு (11.11.2024) ஒத்தி வைத்தார்.