பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்டர்னல் மற்றும் மாதிரி தேர்வுகளை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அனைத்துத்துறை பேராசிரியர்களுடன் துணை வேந்தர் குழந்தைவேல், திங்கள்கிழமை (மே 5) ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இதற்காக, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் மீட் என்ற செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் ஆலோசனை நடந்தது.
காணொலி சந்திப்பு மூலம் நடந்த இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம்:
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் அனைத்துறை உதவி / இணை / பேராசிரியர்களும் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையாவது வெளியிட வேண்டும்.
அனைத்து துறைத் தலைவர்களும் தங்கள் கீழ் உள்ள பேராசிரியர்களுடன், ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆன்லைன் மூலம் கலந்துரையாட வேண்டும். இதற்காக பல்கலை இணையப்பிரிவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்காக புதிய முன்மொழிவுகளை பெரியார் பல்கலைக்கழக அறிவியல் புலத்தினர் விரைவில் தயார் செய்தல் வேண்டும். அதேநேரம், மற்ற புலத்தினர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான உபகரணங்களை தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து துறைத் தலைவர்களும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து அந்தந்த துறை ஆசிரியர்களுடன் ஆலோசித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இன்டர்னல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தேவைப்படின், மாதிரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் ஜூன் மாத இறுதிக்குள் செல்ஃப் ஸ்டடி ரிப்போர்ட் (எஸ்எஸ்ஆர்) குறித்த உத்தேச அறிக்கை நிபுணர்களின் மதிப்பீட்டிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்எஸ்ஆர் அறிக்கை தயாரிப்புக்கான தேவையான தகவல்களை வழங்கி, பெரியார் பல்கலைக்கழக தர உறுதி பிரிவு இயக்குநர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். அனைத்துத்துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், விரைவில் பெரியார் பல்கலைக்கழக தேசிய தர மதிப்பீட்டுக்குழு வர இருப்பதால் அதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் துணை வேந்தர் கேட்டுக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்கள் யாரேனும் பல்கலைகழகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற விரும்பினாலோ, மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்த விரும்பினாலோ அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக பேராசிரியர்கள் கூறினர்.
எனினும், கூகுள் மீட் குறித்த டெமோ லிங்க் பேராசிரியர்களுக்கு மே 3ம் தேதி அனுப்பி இருந்ததால், பலர் அந்த இணைப்பில் சென்று செயலியை பதிவிறக்கம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், கடைசி வரை டெமோ லிங்க் மூலம் இணைப்புக் கிடைக்காததால் பல பேராசிரியர்களால் துணை வேந்தருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.