உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரோனாவால் மக்களிடம் நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது ஒன்றே வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்பதை இத்தாலி சம்பவங்களுக்குப் பிறகு உலக நாடுகள் உணர்ந்துள்ளது.
வேகமாக வைரஸ் பரவி வருவதைப் பார்த்து வெளிநாடுகளில் படிக்கு தங்கள் மகன், மகள்களை உடனே வீட்டுக்கு வாங்க என்று பெற்றோர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேலைக்காக வெளிநாடு சென்றவர்களையும் பல நாடுகள் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெளிநாட்டில் இருந்து யாரும் வர முடியாத அளவில் தடைகள் விதிப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 400 க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாஸ்க்குகள் கூட கிடைக்காமல் பயன்படுத்திய மாஸ்க்குகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் மாணவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த மாணவர் மோனீஸ்கரனைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து கேட்டோம்..
பிலிப்பைன்ஸில் வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அதனால் நாங்கள் சொந்த ஊருக்குப் போகலாம் என்று கிளம்பியுள்ளோம். 17, 18, 19 ஆகிய தேதிகளில் செல்லலாம் என்று சொன்னதால் விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு விமானநிலையத்திற்குச் சென்றால் இந்தியாவிற்கு செல்ல இந்திய நாடு அனுமதி கொடுக்கவில்லை என்று 3 நாட்களும் நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகும் நாங்கள் இந்தியா திரும்ப அனுமதிக்கவில்லை. அதனால் வாடகை வீடு, விடுதிகளில் தங்கி இருக்கிறோம். விடுதியில் இருப்பவர்களுக்கு ஓரளவு உணவு கிடைக்கிறது. ஆனால் வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.
மாஸ்க்குகள் கிடைக்கவில்லை. பல நாட்களாக பயன்படுத்திய மாஸ்க்குகளையே வெயிலில் காயவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறோம். வேறு வழியில்லை. 17 ந் தேதி விமானநிலையம் சென்று காத்திருந்த போது இந்தியத் தூதரகம் உணவு வழங்கியது. அதன் பிறகு இந்தியா உங்களை அழைத்துக் கொண்டால் உடனே அனுப்புவதாகக் கூறினார்கள். அதேநேரத்தில் சிங்கப்பூர் சென்றால் அங்கிருந்து இந்தியா போகலாம் என்ற வதந்தியும் பரவியுள்ளதால் அதற்காகவும் முயன்று முடியாமல் அறைகளில் முடங்கிக் கிடக்கிறோம்.
எங்களைப் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் விமானத்தில் அனுமதிப்பார்கள். அதன் பிறகு இந்திய விமானநிலையத்திலும் சோதிப்பார்கள். வைரஸ் இல்லை என்ற பிறகே வீட்டுக்கோ முகாமிற்கோ அனுப்புவார்கள். அதனால் எங்களைச் சோதனைகள் செய்து உடனே இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்திய மாணவர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் சொந்த ஊருக்கு அழைத்து வாருங்கள் என்று உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.