திருச்சி சமயபுரம் கோவில் விஷேச நாட்களில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தினமும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி பக்தி மிகுந்த இந்த கோவிலை சுற்றியுள்ள விடுதிகளில் தான் யாரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விபச்சாரம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது என்றார்கள்.
இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அர்வலர்கள் தொடர்ச்சியாக திருச்சி சமயபுரத்தில் இருக்கும் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சொல்லிக்கொண்டே இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது.
சமயபுரம் கோவிலை சுற்றி 17 பெரிய விடுதிகள் உள்ளன. அதே போன்று 6 சிறிய விடுதிகள் உள்ளன். இது மட்டும் இல்லாமல் பழைய திருமணம் மண்டபங்கள் அனைத்தையும் தடுத்து சிறிய சிறிய அறைகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் சமயபுரத்திற்கு கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காக என்று வெளிப்படையாக தெரிந்தாலும் இந்த விடுதிகளில் பாதிக்கு மேல் விபச்சாரம் தான் முக்கிய தொழிலாக நடைபெற்றுவருகிறது.
இவர்கள் இப்படி தைரியமாக விபச்சாரத்தை செய்வதற்கு முக்கிய காரணம் அந்த ஏரியாவில் உள்ள லோக்கல் போலிஸ் தான் என்கிறார்கள். அவர்கள் தலைமையில் தான் இந்த விபச்சாரம் நடைபெறுகிறதாம். சமயபுரம் தனிப்படையில் இருக்கும் ஒரு சில போலீஸ்காரர்களை கைக்காட்டுகிறார்கள். கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட இந்த விடுதிகளில் சிசிடிவி கேமரா எங்கேயும் இல்லையாம். திட்டமிட்டே கேமரா பொறுத்தாமல் போலிஸ் துணையோடு விபச்சாரம் நடக்கிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக லால்குடி துணை காவல் சூப்பிரண்டராக இருக்கும் ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த விடுதிகளில் 2 பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் புரோக்கர்களாக செயல்பட்டதாக கூறி விடுதியின் காவலாளிகள் கருப்பையா (62), தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், உடந்தையாக இருந்ததாக கூறி விடுதி மேலாளர்கள் பொன்னையா (62), ரபீக் அகமது (43) என்ற இருவரையும் அவர்களுடன் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த 4 பெண்களையும் போலீசார் மீட்டனர்.
இதன் காரணாமாக கைது செய்பப்பட்ட அனைவரையும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் எண் 3-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அதன் பின் மீட்கப்பட்ட பெண்கள் நால்வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதே என்று கேட்டதற்கு, ஏதோ கணக்கிற்கு பிடித்தது போன்று கணக்கு காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
விபச்சார தடுப்பு பிரிவு மாநகரில் மட்டும் செயல்படுவதால் திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளுக்கு அந்த ஏரியா காவல்நிலையம் தான் இதற்கு பொறுப்பாம். என்பதால் இன்னும் எளிதாகிறது விபச்சார தொழிலுக்கு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் கோவிலை சுற்றி விடுதிகள் உள்ளது போன்று பெரிய கல்வி நிறுவனங்களும் இருக்கிறன. இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியை நோக்கி செல்கிறது. இதை கருத்தில் கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக விபச்சார சோதனை நடத்த வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.