கரோனாவால் பெண் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை நேரில் சந்தித்துப் பேச கிளைச்சிறை நிர்வாகம் உறவினர்களுக்குத் திடீர் தடை விதித்துள்ளது.
சேலம் மத்திய சிறை அருகில் பெண்கள் கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது 50 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராசிபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்ற கைதியும் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என்றாலும், சிறையில் அடைத்த பிறகே மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது. அதில் மகேஸ்வரிக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மகேஸ்வரியை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று கரோனா வார்டில் அனுமதித்தனர். கிளைச்சிறையில் அவருடன் இருந்த சக கைதிகள் மட்டுமின்றி, இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற கைதிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கைதிகளுக்கும் கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, பெண் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் திடீர் கட்டுப்பாடுகளை விதித்து கிளைச்சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெண் கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள், இதற்கென கோரிக்கை மனு வழங்க வேண்டும். வார நாள்களில் மட்டும் கைதிகளை சந்தித்துப் பேச அனுமதி உண்டு.
இந்நிலையில், வெளியே இருந்து சிறைக்கு வரும் உறவினர்கள் மூலமோ அல்லது சிறைக்குள் இருக்கும் கைதிகள் மூலம் மற்றவர்களுக்கோ கரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க, கைதிகளை நேரில் சந்தித்துப் பேச கிளைச்சிறை நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
கிளைச்சிறையின் முன்பகுதியில், சிறைவாசிகளைப் பார்க்க அனுமதியில்லை என துண்டறிக்கையும் ஒட்டப்பட்டுள்ளது. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் இந்த அறிவிப்பை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நோய்த் தொற்று கட்டுக்குள் வரும்வரை இந்தக் கட்டுப்பாடு தொடரும் என கிளைச்சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.