Skip to main content

பெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது! 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பியூஷ் மானுஷ். சமூக ஆர்வலர். அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சிங்- ஆஷா குமாரி தம்பதிக்குச் சொந்தமான வீட்டில், கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு வீட்டின் உரிமையாளர் எஸ்என்.சிங் திடீரென்று இறந்துவிட, அவருடைய மனைவி ஆஷாகுமாரி, பெங்களூருவில் உள்ள மகள் அக்கன்ஸ் வீட்டிற்குச் சென்று விட்டார்.

salem social activist piyush manush police arrested

வீட்டு குத்தகை ஒப்பந்தக்காலம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ஒப்பந்தக் காலத்தை புதுப்பிக்காமலும், வீட்டைக் காலி செய்யாமலும் பியூஷ் மானுஷ் குடும்பத்துடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டை காலி செய்யும்படி பலமுறை கூறியும் அவர் மறுத்துவிட்டாராம்.


இதையடுத்து, ஆஷாகுமாரியும் அவருடைய மகளும் புதன்கிழமை (பிப். 26) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று பியூஷ் மானுஷ் மீது, தன் வீட்டை காலி செய்ய மறுப்பதாக புகார் அளித்தார். மேலும், பியூஷ் மானுஷ் வசித்து வரும் வீட்டிற்கும் சென்று ஆஷாகுமாரியும், அவருடைய மகளும் கூச்சல் போட்டனர். 

salem social activist piyush manush police arrested

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், பியூஷ் மானுஷை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர் ஒப்பந்தக்காலம் முடிந்த பிறகும் வீட்டை காலி செய்யாமல் இருப்பதும், வீட்டு உரிமையாளரை தாக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 மற்றும் இ.த.ச. பிரிவுகள் 294 பி (ஆபாச வார்த்தைகளால் திட்டுதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 323 (காயங்களை விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 


அதையடுத்து பியூஷ் மானுஷை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் மார்ச் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


இதுகுறித்து பியூஷ் மானுஷ் கூறுகையில், ''இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. நடந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் என்னிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்