சேலத்தில், தனியார் கல்லூரி பேருந்து மோதி, அதே கல்லூரியின் மாணவர் பலியானார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சக மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீ. இவருடைய மகன் அப்துல் சலாம் (21). சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) இறுதி ஆண்டு படித்து வந்தார்.
மே 30ம் தேதி மாலை வகுப்புகள் முடிந்ததை அடுத்து, வீட்டுக்குச் செல்வதற்காக வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் ஏறினார். கல்லூரி நுழைவாயில் அருகே வந்தபோது, அப்துல்சலாம் திடீரென்று பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 31) காலை கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியில் இருந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற பேருந்துகளை மறித்தும் போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரிக்கு வெளியே 27 பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் வழியிலேயே அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், அப்துல் சலாமை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் ஆறுதல் கூறவில்லை; கல்லூரிக்கு விடுமுறை விடவில்லை. மேலும், இறந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். வட்டாட்சியர் செம்மலை, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி தாளாளர் ராஜேந்திரபிரசாத்தும் மாணவர்களிடம் பேசினார். மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, உதவியாக கல்லூரி சார்பில் இரண்டு ஊழியர்கள் அங்கு இருந்தனர்.
மாணவரின் பெற்றோரிடமும், அவருடைய சமுதாய பெரியோர்களிடமும் பேசிவிட்டேன். கல்லூரிக்கு விடுமுறை விடப்படும் என்றும் கூறினார். இதில் திருப்தி அடையாத மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி தாளாளர் நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று, அப்துல் சலாமின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து பகல் ஒரு மணி அளவில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், உயிரிழப்புக்குக் காரணமான பேருந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.