Skip to main content

சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்! வேலியே பயிரை மேய்ந்ததால் கமிஷனர் அதிரடி!!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 


சேலத்தில், மோசடி புகார்களை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐ முதல் ஏட்டுகள் வரையிலான 11 பேர் ஒரே நாளில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.


சேலம் மாநகர காவல்துறையில் நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு என்ற சிறப்புப்பிரிவு உள்ளது. இதர உள்ளூர் காவல்நிலையங்களைப் போல் அல்லாமல், இந்தப் பிரிவில் பெறப்படும் புகாரின்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் முன் துணை ஆணையர், ஆணையர் ஆகியோரின் அனுமதி பெறப்பட்ட பிறகே பதிவு செய்யப்படும். மத்தியக் குற்றப்பிரிவுக்கென்றே தனியாக காவல் உதவி ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு, நேரடியாக மேற்பார்வையிட்டு வருவார்.

 

 Transfer -




சேலத்தில், நகர காவல் நிலைய வளாகத்தில் மாநகர மத்தியக்குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில லட்சங்களுக்கு மேலான மோசடி நடந்த புகார்களை மத்திய குற்றப்பிரிவினரே விசாரிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பிரிவில் நிறைய மோசடி வழக்குகள் முடிவடையாமல் தேங்கிக் கிடந்தன. அதையடுத்து, முன்பு இருந்த காவல்துறை ஆணையர் சங்கர், மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதல் காவலர்களை நியமித்தார். அதையடுத்து, நீண்டகாலமாகத் தேங்கிக்கிடந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தற்போது 30 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருக்கின்றன.


இது ஒருபுறம் இருக்க, மோசடி வழக்குகளை விசாரிக்கும் சில காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், புகாரில் சிக்கிய நபர்களிடமே கூட்டு சேர்ந்து கொண்டு, கல்லா கட்டி வருவதாக நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் மூலமாக காவல்துறை ஆணையருக்குப் புகார்கள் சென்றன.


ஒரு பெரும் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாயை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், கணிசமான பகுதியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் உள்ள சிலர் பங்குபோட்டுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் பரபரப்பாக உலா வருகிறது. இந்த பரபரப்புக்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றி வந்த ஆய்வாளர் விஜயகுமாரி குறுகிய காலத்திலேயே அங்கிருந்து மாற்றப்பட்டார். 


 


இது ஒருபுறம் இருக்க, அடிக்கடி புகார்களில் அடிபட்டு வந்த தலைமைக் காவலர்கள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரையிலான 11 பேரை, ஒரே நாளில் தடாலடியாக இடமாற்றம் செய்து ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். 

 


அதன்படி, மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ கலைவாணி, எஸ்எஎஸ்ஐக்கள் கதிரேசன், பாஸ்கரன், முனவர் செரீப், குமாரலிங்கம், அர்த்தநாரீஸ்வரன், முருகேசன், தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், வெங்கடாசலம், சுந்தர், முரளிதுரை ஆகியோர் வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஓரிருவர் தவறு செய்யாதவர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவை நம்பி புகார் கொடுக்க வருகின்றனர். ஆனால் இங்குள்ள சிலரோ, குற்றவாளிகளிடமே பணம் வசூலித்துக்கொண்டு, அவர்களை தப்பிக்க விடுகின்றனர். அல்லது முன்ஜாமின் பெற திட்டம் வகுத்துக் கொடுக்கின்றனர். அதுபோன்ற ஒரு சிலரால், சில வழக்குகளில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. தற்போது புகாருக்குரிய நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார். 

சார்ந்த செய்திகள்