சேலத்தை தூய்மையான மாநகரமாக மாற்ற, நடைப்பயிற்சியின்போது நடைபாதையில் தென்படும் குப்பைகளை சேகரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இப்பணியில் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மக்காத குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிறன்று (டிச. 27) அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட கோம்பைப்பட்டி சாலை, ஏற்காடு முதன்மைச்சாலை, பச்சியம்மன் திரையரங்கு சாலை, ஏடிசி நகர் ஆகிய இடங்களில் சிறப்பு குப்பைகள் அகற்றும் பணிகள் (பிளாக்கிங்) நடந்தன. மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் 400 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். 770 கிலோ நெகிழிகள் உள்ளிட்ட இதர மக்காத கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
காவல்துறை துணை ஆணையர்கள் செந்தில், சந்திரசேகர், உதவி ஆணையர்கள், மாநகர நல அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக டிச.26- ஆம் தேதி, சாமிநாதபுரம், ஆர்.டி.பால் தெரு, குரங்குசாவடி முதன்மைச்சாலை, இரும்பாலை முதன்மைச்சாலை, வித்யா நகர், வீராணம் சாலை, கடலூர் சாலை, கோவிந்தம்மாள் நகர், புத்தூர் இட்டேரி சாலை, அன்னதானப்பட்டி சாலை பகுதிகளில் சிறப்பு குப்பை அகற்றும் பணிகள் நடந்தன. இதில் 450 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 860 கிலோ நெகிழிகள் உள்ளிட்ட மக்காத கழிவுப் பொருள்களை சேகரித்தனர். சனிக்கிழமை தோறும் இப்பணிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது சேலம் மாநகராட்சி.