சேலம் தென்அழகாபுரம் குடிநீர் வாரிய காலனியைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் அஸ்பர். இவர் கிரிஸ் டிசைன் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், ''சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ஸ்ரீமகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அத்துடன், பங்குச்சந்தை வணிகத்திலும் ஈடுபட்டு வந்தார். அவர் என்னிடம், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி முதல்கட்டமாக அவரிடம் 5 லட்சம் ரூபாயை கொடுத்தேன். மேலும், என்னுடைய நண்பர்கள், உறவினர்களிடம் வசூலித்த ஒரு கோடி ரூபாயையும் அவரிடம் கொடுத்து இருந்தேன். ஆனால் அவர் அத்தொகைக்கு வட்டியாக இதுவரை 5 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். பலமுறை கேட்டும், அவர் வட்டியோ, என்னுடைய அசல் தொகையையோ கொடுக்கவில்லை.
இந்நிலையில், ரவிக்குமாரின் மனைவி கந்தலட்சுமி (35), அவருடைய தம்பி பாலமணிகண்டன், அஸ்தம்பட்டி அய்யர் சாலையைச் சேர்ந்த அங்கமுத்து மகன் குருதர்மன் (59), கோவையைச் சேர்ந்த அவருடைய நண்பர் மணிகண்டன் ஆகியோர், பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, நகைக்கடை உரிமையாளர் ரவிக்குமார் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த ரவிக்குமாரும், அவருடைய மனைவியும் நகைக்கடையை மூடிவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டனர். வியாழக்கிழமை (மார்ச் 19), கஜலட்சுமி, குருதர்மன் ஆகிய இருவரும் ஓரிடத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட குருதர்மன், அதிமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இந்த புகார் தொடர்பாக மேலும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரவிக்குமார் மீது மேலும் பலர் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.