சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக இன்று (டிச. 27, 2019) 2142 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக காலை 07.00 மணிக்குத் தொடங்கி, மாலை 05.00 மணிக்கு முடிகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 27) நடந்து வரும் நிலையில், இண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 30ம் தேதியும் நடக்கிறது. பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்பட இருக்கிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என மொத்தம் 4299 பதவிகள் உள்ளன.
இப்பதவிகளுக்கு மொத்தம் 17217 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 17003 மனுக்கள் ஏற்கப்பட்டு, 214 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2677 பேர் வேட்புமனுக்கள் திரும்பப் பெற்றனர். 403 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 13923 பேர் தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர்.
முதல்கட்டமாக, இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஒன்றியங்களுக்கு இன்று (27.12.2019) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 05.00 மணிக்கு முடிகிறது. மேலும், 17 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 169 ஒன்றியக்குழு உறுப்பினர், 194 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 1914 கிராம ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் என 2294 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இவற்றில் 152 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்பதால், 2142 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இப்பதவியிடங்களுக்கு கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.
முதல்கட்ட வாக்குப்பதிவில் 482652 ஆண் வாக்காளர்களும், 455758 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 938445 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக 1568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர், நிலை அலுவலர்கள், உதவியாளர்கள் என 18 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க சேலம் மாவட்ட, மாநகர காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 3000 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.