சேலம் அருகே, அடுத்தடுத்து கரோனா நோய்த் தொற்றால் பலர் மரணம் அடைந்ததால், அச்சம் அடைந்த பொதுமக்கள், செல்லியம்மனுக்கு எருமை மாட்டைக் காவு கொடுத்து பரிகார பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சராசரியாக 1000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், ஆத்தூர் கோட்டை பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதால், கோட்டை பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி பிரமுகர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பெண்ணுக்குத் திடீரென்று அருள் வந்து, செல்லியம்மன் கோயிலில் உயிர்ப்பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 28) நள்ளிரவு செல்லியம்மன் கோயிலில் ஊர் மக்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின்னர், அம்மனுக்கு எருமை மாடு ஒன்றும், 4 ஆடுகளையும் பலியிட்டனர். காவு கொடுக்கப்பட்ட எருமையைக் கோயில் வளாகத்தின் ஒரு பகுதியிலும், பலியிட்ட ஆடுகளைக் கோட்டை பகுதியின் நான்கு எல்லைகளிலும் புதைத்தனர்.
அம்மனுக்கு எருமை மாடும் ஆடுகளும் காவு கொடுக்கப்பட்டதால் இனி கோட்டை பகுதியில் யாருக்கும் கரோனா உள்ளிட்ட எந்தவித நோய்நொடியும் வராது என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கரோனாவுக்குப் பரிகார பூஜை செய்த விவகாரம் காட்டுத்தீ போல பரவியதால், சேலம் மாவட்டத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.