சேலம் மத்திய சிறையின் முன்னாள் வார்டனை வெட்டி கொலை செய்தது ஏன் என்று கைதான 9 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சேலம் சோளம்பள்ளம் அய்யம்பெருமாம்பட்டி புது சாலையைச் சேர்ந்தவர் மாதேஷ் (28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். ஜூலை 11ம் தேதி, ஆண்டிப்பட்டி பகுதியில் அவரை 9 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக சூரமங்கலத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் (35), அவருடைய கூட்டாளிகள் சாஸ்திரி நகர் அக்பர் பாஷா (37), தர்மன் நகர் பாரூக் (37), கல்யாணசுந்தரம் காலனியைச் சேர்ந்த செல்வம் (36), விக்ரம் (32), ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த குமார் (27), முல்லை நகர் ராஜேஷ் (35), தர்மன் நகர் சையத்பாஷா (36), கன்னங்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்த மாதேஷ் (36) ஆகிய ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான டேவிட்டிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலம்:
சிறை வார்டன் மாதேஷ் எனது தோழி கார்த்திகாவை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்தார். அவரை காதலிப்பதாகவும் சொன்னார். ஆனால் அவரை கார்த்திகாவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் படி மாதேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து கார்த்திகா என்னிடம் அழுது புலம்பினார். மாதேஷை கண்டித்து வைக்கும் படி சொன்னார். அதன் படி நானும் மாதேஷை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தேன். இந்நிலையில் தான் கார்த்திகா ஓட்டி வந்த ரியல் எஸ்டேட் அதிபர் செல்வத்திற்குச் சொந்தமான காருக்கு மாதேஷ் தீ வைத்தார். என் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காருக்கும் தீ வைத்தார். எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். கார்த்திகாவுக்காக எச்சரிக்கை விடுத்ததால் ஆத்திரத்தில் என் காரையும் அவர் எரித்ததால் மாதேஷ் மீது எனக்கு ஆத்திரம் உண்டானது.
இதற்கிடையே நான் அளித்த புகாரின் பேரில்தான் மாதேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் தான் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். நான் வேலை பார்த்த சிறையிலேயே என்னை தள்ளி விட்டாயே. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மாதேஷ் மிரட்டினார். இதுகுறித்து என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்களோ, மாதேஷை தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று யோசனை சொன்னார்கள். இதையடுத்து ஜூலை 10ம் தேதியன்று, மாதேஷூக்குச் சொந்தமான மீன் பண்ணைக்கு அருகே வைத்து அவருடைய கதையை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அன்று அவர் வரவில்லை.
இதையடுத்து மறுநாள் கூட்டாளிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் சென்று மாதேஷை கண்காணித்தோம். அவர் மீன் பண்ணைக்குச் சென்று விட்டு வெளியே வந்த போது வெட்டி கொலை செய்தோம். இவ்வாறு டேவிட் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். அவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.