சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி அருகே உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பரப் பலகை சரிந்து விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
கோவை புறநகர் பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் அவினாசி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்று வந்தது. ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பேனர் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் கான்ட்ராக்ட் எடுத்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பேனர் கட்டுவதற்கான சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில் மூன்று தொழிலாளர்கள் பேனரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காண்ட்ராக்டர் பழனிசாமி தற்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், மூன்று பேரின் உடல்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேனர் வைக்கும் பணி நடைபெற்றதா என்பது தொடர்பாக எஸ்.பி பத்ரிநாராயணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விளம்பரப் பலகை பேனர் சரிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.