Skip to main content

எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலில் மாந்திரீகவாதி தற்கொலை!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

 

salem incident police investigation

 

சேலம் அருகே, காவல்துறை எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலில் மாந்திரீகவாதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவர்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

 

சரவணன், அப்பகுதியில் மாந்தீரிகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அமாவாசை நாட்களில் இவரிடம் வரும் நோயாளிகளுக்கு மாந்திரீகம் செய்த தாயத்து, கயிறுகளை கட்டி விடுவது வழக்கம். இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து பல்வேறு நோய்கள் குணமாக வேண்டி தாயத்து, மந்திரித்த கயிறுகளை கட்டிச்செல்கின்றனர். 

 

கடந்த 14- ஆம் தேதி மாலை சரவணன், தனது வீட்டிற்கு வந்த பெண் ஒருவருக்கு தாயத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் காவலர்கள், சரவணனை அரை நிர்வாணத்தில் இருப்பதாகக்கூறி தாக்கியுள்ளனர். அதற்கு அடுத்த நாள் முதல் சரவணன் மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, அவருடைய செல்போனில் இருந்து நண்பர்களின் செல்போன் எண்களுக்கு ஒரு காணொலி பதிவு வந்தது. அதில் பேசிய சரவணன், ''என்னுடைய இந்த முடிவுக்கும், மன உளைச்சலுக்கும் எஸ்ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம். அவர் என்னை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்.

 

என்னுடைய இந்த கஷ்டமான முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. அதிகார தோரணையில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்தோணி மைக்கேல் அடித்தார். அத்தனை பேரையும் என்னுடைய ஆன்மா சும்மா விடாது. அப்பா உன்னிடம் வர்றேன்,'' என்று பதிவிட்டிருந்தார்.

 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நண்பர்கள் சரவணனை மீண்டும் தீவிரமாக தேடினர். இந்நிலையில், அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு இடையே சரவணன் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை (ஆக. 20) தெரிய வந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் காவல் ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

 

எஸ்ஐ தாக்கியதால் மன உளைச்சலால் மாந்திரீகம் செய்து வந்தவர், காணொளியில் வாக்குமூலம் அளித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்