இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகள் தொலைதூரங்களில் நடப்பதால் மாணவர்கள் சென்று வர சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிக மாணவிகளை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகமான மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு எழுத புதுக்கோட்டை, திருச்சியில் பல்வேறு பகுதிக்கும் செல்ல வேண்டிய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக வேன்கள் ஏற்பாடு செய்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாதுகாப்போடு 65 மாணவிகளையும் வாழ்த்துக் கூறி அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோவித்தராஜ் கூறும் போது.. ''கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 11 மாணவிகள் தேர்ச்சி பெற்று 4 பேர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள். அதேபோல கடந்த ஆண்டு 7 மாணவிகள் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த வருடமும் 65 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம். கடந்த ஆண்டு மாணவிகள் 10 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானவர்கள் மருத்துவம் படிக்கச் செல்வார்கள்'' என்றார் நம்பிக்கையோடு...