Skip to main content

தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; 3 ஆசிரியர்கள் கேரளாவில் பதுங்கல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

salem in incident

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனோகரன் பெற்றோருடன் உள்ளார். மற்ற இரு மகன்களும் வெளிநாட்டில் உள்ளனர்.

 

வீரகனூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நவீனன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மாதேஸ்வரிக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தனர். இதற்கிடையே, வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கித் தருமாறு மாதேஸ்வரி அவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, அவர்களுடன் பணியாற்றி வரும் மற்றொரு ஆசிரியர் சங்கர் ஆகியோர் வங்கியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, வங்கியில் கடன் பெற்றுக் கொடுத்ததற்காக சொத்து உத்தரவாதம் வேண்டும் என்று கூறி, மாதேஸ்வரிக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றி பதிவு செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கடன் அசல், வட்டி ஆகியவற்றை முறையாகச் செலுத்தி வந்த பிறகும் தன் வீட்டை, ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதால், மாதேஸ்வரி விரக்தி அடைந்தார்.

 

தன்னுடைய வீட்டை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிக் கொடுத்து விடுமாறு பலமுறை அவர்களிடம் கேட்டுப் பார்த்தும் ஆசிரியர்கள் இறங்கி வரவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர்கள் நவீனன், தமிழ்ச்செல்வி, சங்கர் ஆகியோர் மீது வீரகனூர் போலீசார் மாதேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, வங்கிக் கடனை மாதேஸ்வரி சரியாக செலுத்தவில்லை என்றும், கடனை செலுத்துமாறு கூறியபோதும் அவர் மறுத்ததால் அதற்கு உத்தரவாதமாக மாதேஸ்வரியை வீட்டை எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

 

இந்த மேலோட்டமான விசாரணையோடு நின்றுகொண்ட போலீசார், அவர்களைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு வந்ததால், வேதனை அடைந்த பெரியசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

 

கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தின் பின்னணியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் விசுவரூபம் எடுத்தது.

 

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினர். பணி நேரத்தில் வட்டித்தொழில் செய்து வந்ததாலும், அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாலும் உடனடியாக மூன்று ஆசிரியர்களையும் பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகே போலீசாரும் உஷார் ஆனார்கள். விவகாரம் வேறு திசையில் பயணிப்பதை உணர்ந்த அவர்கள், ஆசிரியர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் கேரளா மாநிலத்திற்குச் சென்று பதுங்கி விட்டதாக தெரிகிறது.

 

இதுகுறித்து வீரகனூர் காவல் ஆய்வாளர் முருகனிடம் கேட்டபோது, ''மாதேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தோம். 3 ஆசிரியர்களுக்கும் முன்ஜாமின் கொடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் எதிர்மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். இந்நிலையில்தான் அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்