தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பொதுவாக வழிபட்டு வந்துள்ளனர். இந்த கோவிலில் உள்ள அம்மன் சக்தி வாய்ந்த கடவுள் என்று பக்தர்களிடையே நம்பிக்கை இருந்ததால் கோவிலின் வருமானம் பல கோடிகளை தாண்டியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோவிலை அபகரிக்கும் நோக்கில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செயல்பட்டு வந்ததாகவும், கோவில் வரவு செலவுகளை சரிவர காட்டாமல் ஊழல் செய்ததாகவும், மற்ற 9 சமுதாய மக்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை என்றும் பிரச்சனை எழுந்தது. இதனையடுத்து
சமூக ஆர்வலர் ராஜா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கோவிலை அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து சமுதாயத்தில் இணைந்தும் சம உரிமை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவிலை கொண்டுவருவதற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கோவிலை கையகப்படுத்த சென்று இருந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த 8 உண்டியல்கள் மற்றும் வரவு செலவு இனங்களுக்கான தஸ்தாவேஜுகள் மறைக்கப்பட்டிருந்தன. இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அப்போது கடந்த வருடம் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற வேண்டி இருந்ததால் குழப்பங்களை நீக்க கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் எப்போதும்போல் சம உரிமையுடன் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஆண்டும் அதேபோல் பிரச்சினை எழுந்தது. இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் நீதி அரசர்கள் எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருவிழா நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே அனைத்து சமூகத்தினரும் சம உரிமையுடன் திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யும் படியும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அனைத்து சமுதாயத்தையும் அழைத்து கடந்த ஆண்டுகளைப் போல் சமாதான கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தேனி மாவட்ட கலெக்டர் பெரியகுளம் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சமாதான கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே நேற்று உத்தரவை மீறும் வகையில் முகூர்த்தக்கால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஒன்பது சமுதாய மக்கள் இதற்கு நியாயம் கேட்டு தேனி நெடுஞ்சாலையில் எம்ஜிஆர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான இந்த சூழலில் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் அவர்களை தடியடி செய்து அப்புறப்படுத்தி கலைத்தனர்.காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.