சேலம் அருகே, மகனை அரசுப் பள்ளியில் சேர்க்கச் சென்ற பெண்ணிடம் தலைமை ஆசிரியர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே ஊரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தன் மகனை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக சிறுவனை அழைத்துக்கொண்டு வியாழக்கிழமை (பிப்.11) பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், அங்கிருந்து தன் மகனை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து அவர், உறவினர்களிடம் நடந்த விவரங்களைக் கூறியதை அடுத்து, உள்ளூர்க்காரர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதுபற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், இடைப்பாடி வட்டாரக் கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர். புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பள்ளித் தலைமை ஆசிரியர் தன் அறைக்கு மட்டும் சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டிய கருப்பு கண்ணாடியை சொந்த செலவில் அமைத்திருக்கிறார். அதுவும் இந்தச் சம்பவத்தின்போது சர்ச்சையானது.