சேலத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அரசுப் பொருட்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 28) தொடங்கியது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில், நடப்பு ஆண்டில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் பொருட்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இரு நாள்களுக்கு முன்பு அரங்குகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றன.
இதையடுத்து, அரசுப் பொருட்காட்சியை, தமிழக நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.28) தொடங்கி வைத்தனர். பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் அரங்குகள், மாநகராட்சி அரங்கு மற்றும் குழந்தைகளுக்கான ஜெயண்ட் வீல் ராட்டினம், டோர டோரா உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு சாதனங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேட்டூர் நீரேற்று நிலைய மாதிரி வடிவமைப்புடன் கூடிய பொருட்காட்சி முகப்பு, பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புகைப்படமும், பனைமரத்துப்பட்டி ஏரியின் கோபுரம் படமும் மாநகராட்சி அரங்கில் இடம் பெற்றுள்ளன.
பனைமரத்துப்பட்டி ஏரியின் முழு தோற்றம் மட்டுமின்றி, அதிலிருந்து சேலத்திற்கு குடிநீர் கொண்டு வரும் தொழில்நுட்பத்தை விளக்கும் மாதிரியும், குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் முறை குறித்த செயல்விளக்க மாதிரிகளும் இடம்பெற்றுள்ளதும் வெகுவாக கவர்ந்துள்ளன.
பொருட்காட்சி துவக்க விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மக்கள் செய்தி தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பாமக எம்.எல்.ஏக்கள் சதாசிவம், அருள், மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.