சேலத்தில், உணவுப்பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெறாமல் இயங்கி வந்த சேகோ ஆலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டது. மேலும், அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 100 டன் ஜவ்வரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். அப்பகுதியில் சேகோ ஆலை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவற்றை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிறுவனத்தில், சேலம் உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை (நவ. 13) திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், விதிகளை மீறியும், உணவுப்பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெறாமலும் வணிகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமமின்றி விற்பனைக்காக லாரியில் ஏற்றப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 டன் ஜவ்வரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை உரிமம் பெறாதது குறித்து விளக்கம் கேட்டு, ஆலை அதிபர் சோமசுந்தரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவற்றின் ஆறு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவுப்பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, அதன் அடிப்படையில் ஆலை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர் கதிரவன் கூறினார்.