தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின், தேர்த்திருவிழா கடந்த மூன்று நாள்களாக வெகு விமர்சையாக நடந்தது. திங்களன்று (பிப். 10) இறுதி நாள் தேர் ஊர்வலம் வந்தது. மாலை 06.00 மணியளவில் தேர், கோயில் திடல் அருகே நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
அதையடுத்து, தேரில் இருந்து சாமியை இறக்கி வைத்தனர். இரவு 08.30 மணியளவில், தேரை இழுத்து வந்த இளைஞர்கள் மேளதாளம் முழங்க கோயிலை மூன்று சுற்று சுற்றி வந்தனர். அப்போது இளைஞர் ஒருவர், 'நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் ஆடுகிறீர்கள்? நீங்கள் தேர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தால், தனியாக நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியதுதானே?,' என்று வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பார்த்து கேட்டார். இதை எதிர்பார்க்காத அந்த தரப்பு இளைஞர், ஆத்திரம் அடைந்தார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து பேசிய இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்தார்.
தாக்கப்பட்ட வாலிபர், தனது நண்பர்களை ஒருங்கிணைத்தார். ரவி என்பவர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோயில் அருகே திரண்டனர். பதிலுக்கு, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் ஆள்களை அழைத்து கோயில் திடல் அருகே வரச் செய்தார். இதையடுத்து இரண்டு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் அசாதாரண நிலை உருவானது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். முதல்கட்டமாக இந்த மோதலில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே சாதி மோதலாக வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. செவ்வாயன்றும் தாரமங்கலம் கோயில் சுற்றுவட்டாரத்தில் பதற்றமான சூழலே நிலவியது.