Skip to main content

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை! குடும்பத் தகராறா? பணி அழுத்தம் காரணமா?

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

 

salem district police incident police investigation

 

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை! குடும்பத் தகராறா? பணி அழுத்தம் காரணமா?

 

சேலத்தில் ஆயுதப்படை காவலர், தனது மனைவியின் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறால் இம்முடிவை எடுத்தாரா அல்லது பணி அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமுடையானூர் காட்டூரைச் சேர்ந்தவர் பாலாஜி (32). சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். அயல்பணியின்பேரில் அவர் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி.யின் வாகன ஓட்டுநராக இருந்து வந்தார். 

 

இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. மனைவியுடன் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன், மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்தது. வீட்டின் தேவைக்காக பாலாஜி சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 20) அன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் அனிதா வழக்கம்போல் தனது அறைக்குள் சென்று தூங்கி விட்டார். திங்களன்று காலையில் எழுந்து தனது அறைக்கதவைத் திறக்க முயன்றபோது, வரவேற்பறை பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

 

ஜன்னல் வழியாக அவர் பக்கத்துக் குடியிருப்பைச் சேர்ந்த காவலர்களிடம் தகவல் சொல்லி, கதவைத் திறந்து விடுமாறு கூறினார். சத்தம் கேட்டு ரோந்து சென்ற காவலர்கள் கதவைத் திறந்தனர். அப்போது அந்த வீட்டின் வரவேற்பறையில் காவலர் பாலாஜி இறந்து கிடந்தார். அவருடைய கழுத்தில் சுடிதார் துப்பட்டா இறுக்கிய நிலையில் கிடந்தது. கணவரின் சடலத்தைப் பார்த்து அனிதா கதறி அழுதார்.

 

ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி தூங்கச்சென்ற பிறகு, அவருடைய அறைக்கதவை வெளிப்புறமாக தாழிட்ட பாலாஜி, வரவேற்பறையில் உள்ள மின்விசிறியில் மனைவியின் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவருடைய உடல் எடை தாங்காமல் துப்பட்டா அறுந்து கீழே விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

 

இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

காவலர் பாலாஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முள்ளுவாடி கேட் அருகே விபத்தை ஏற்படுத்தியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். மேச்சேரி காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, அங்கிருந்த உதவி ஆய்வாளரை சட்டையைப் பிடித்து தகராறு செய்த புகாரிலும் ஒருமுறை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். 

 

தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பி விட்டார் என்றாலும், கடன் கொடுத்த சிலர் அவரிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். மனைவியுடன் அடிக்கடி தகராறு, குழந்தை இல்லாதது ஆகிய பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்பட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, பணியிடத்தில் உயரதிகாரிகளின் அழுத்தம் ஏதாவது இருந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

 

காவலர் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்