150 ஆண்டுகளுக்கு முன்பாக கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகத்திற்குட்பட்ட காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மாடு திருட்டில் ஈடுபட்ட திருட்டுக்கும்பலின் தலைவனை விரட்டிப்பிடித்து பொதுமக்களின் உதவியோடு கந்தர்வகோட்டை ஜமீன்தாரரிடம் ஒப்படைத்த செய்தியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சு.சக்திமகேஸ்வரன், ர.ஜனார்த்தனன் ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
இது குறித்து கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, எமது பள்ளியில் மாணவர்களுக்கு நாட்டின் பழமையான பண்பாட்டு சின்னங்களான கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவடிகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாப்பது குறித்து கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் பங்குபெற்ற தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பழங்கால வீட்டு உபயோகப்பொருட்கள், ஓலைச்சுவடிகள், பழமையான நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகளை அடையாளம் கண்டு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகள் ஆய்வில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் சக்தி மகேஸ்வரன், ஜனார்த்தனன் ஆகியோர் மாணவர் சக்தி மகேஸ்வரன் வீட்டில் கூர்வாள் ஒன்று இருப்பதாகவும், அதனை ஆவணப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உரிய தகவல்களை திரட்டிவர அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூர்வாள் ஜமீன் தாரால் பரிசு வழங்கப்பட்டதன் பின்னணி குறித்த வாய்மொழித்தகவல்களை மாணவர்கள் திரட்டியதில் பல ருசிகரமான தகவல்கள் வெளிப்பட்டது. கந்தர்வகோட்டை ஜமீன் எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக திருடர்களின் அட்டூழியத்தால் தமது பொன் பொருட்களையும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் இழந்ததோடு, திருடர்கள் பயத்தால் மக்கள் இரவில் தூக்கமின்றி அவதிப் பட்டு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது அதன்படி திருடர்களை பிடித்துக்கொடுப்பவருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்பதுதான் அது. ஆனால் இந்த தகவல் குறித்து நல்லபெருமாள் அறிந்திருக்கவில்லை என்றாலும், ஊர்மக்களின் நலனை காக்க வேண்டும் என்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்த திருட்டுக்கும்பலை தன் கையில் வைத்திருந்த சிறு சிலம்பக்கம்பினை வைத்து உயிரை பற்றி கவலைப்படாமல் திருட்டுக்கும்பலை விரட்டியடித்தோடு அக்கும்பலின் தலைவனை கட்டிப்புரண்டு கடைசியில் அவனது கைகால்களை கட்டிப்போட்டார்.
இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட இரைச்சலால் விழித்துக்கொண்ட கிராம மக்கள் அங்கே கூடினர். மேலும் தீப்பந்தங்களுடன் சென்று அன்றிரவே அவனை கந்தர்வகோட்டை அரண்மனையில் ஜமீனிடம் ஒப்படைத்தனர். நீண்ட நாட்களாக மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த திருட்டுக்கும்பலை தனி ஆளாக பிடித்த காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாளுக்கு பண்டாரத்தார் வம்சாவழி ஜமீன்தாரர் மாலை சூடி பாராட்டியதோடு விவசாயிக்கு நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கியதோடு கூர்வாள் ஒன்றையும் பரிசளித்து பாராட்டியுள்ளதாக மாணவர்கள் திரட்டிய தகவல் மூலம் தனிமனிதர் சமூகத்திற்கு எவ்வாறு பயனாக அமைய முடியும் என்பதை அறிய முடிகிறது என்றார்.