நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும்கூட கரோனா வைரஸால் பாதித்தவர்களுக்குச் சேவையாற்றும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கவுரப்படுத்தி இருக்கிறார்கள் சேலம் காவல்துறையினர்.
கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில், இன்றும் தொற்றின் வேகம் தணியவில்லை. இந்தியாவில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 1300- க்கும் மேற்பட்டோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள, வரும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பொதுவெளியில் வந்தாலும், ஒருவருக்கொருவர் 3 அடி தொலைவு இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், தனித்திருத்தல் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களும், செவிலியர்களும் சில இடங்களில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய்த்தொற்று அபாயம் இருப்பது தெரிந்தும்கூட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் சிரமேற்கொண்டு கடமையாற்றி வருகின்றனர். கரோனா பிடியில் இருந்து விலகி குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளை மருத்துவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கின்றனர்.
அண்மையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்காக கரவொலி எழுப்பியும், வீடுகளில் விளக்கேற்றியும் நன்றி தெரிவிக்க வலியுறுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி.
இந்நிலையில் சேலத்தில் மாநகர காவல்துறையினர் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் மரக்கன்றுகளை வழங்கி கவுரவித்தனர். அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையர் ஆனந்தகுமார், காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள் மரக்கன்றுகளை வழங்கியும், கரவொலி எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.
முகக்கவசம் அணியாமல் வரும் மக்களிடம் முகக்கவசம் அணியும்படி விழிப்புணர்வு ஏற்டுத்தினர். நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர். மேலும், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் உள்ள காட்டு மாட்டின் சிலையில் மூக்கின் மீது கவசம் அணிவித்தும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறையினரின் இத்தகைய வித்தியாசமான முயற்சி வெகுவாகக் கவன ஈர்ப்பைப் பெற்றது.