கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதி மாயமானார். அதற்கு அடுத்த நாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட கும்பல்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த வழக்கு தொடர்பாக யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜோதிமணி, அமுதரசு ஆகிய இருவர் தவிர யுவராஜ் உள்பட 15 பேரும் இந்த வழக்கின் சாட்சி விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சேலம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், வழக்கறிஞருமான பார்த்திபன், அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த நவம்பர் 22ம் தேதியன்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். பின்னர் நேரம் இல்லாததால் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை பிறிதொரு நாளில் வைத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
அதையடுத்து மீண்டும் சாட்சி விசாரணை திங்கள்கிழமை (டிசம்பர் 3, 2018) தொடங்கியது. கோவை மத்திய சிறையில் இருந்து கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான அருணை எஸ்கார்ட் அழைத்து வர தாமதம் ஆனதால், சாட்சி விசாரணை பகல் 12.40 மணிக்குதான் தொடங்கியது. அருண், நாமக்கல் நீதிமன்றத்துக்கு பகல் 12.25 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.
யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, பார்த்திபனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
பார்த்திபன்
பார்த்திபனின் சொந்த ஊர், எந்தக் கல்லூரியில் சட்டம் பயின்றார், கோகுல்ராஜை எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களில் இருந்து குவிமுச பிரிவு 161 வாக்குமூலத்தில் அவர் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார்.
மாலை 3.30 மணிக்கு குறுக்கு விசாரணை முடிந்தது. வேறு எந்த சாட்சிகளும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 12.12.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் மீது நீதிமன்றத்தை அவமதித்த வழக்கும் ஜேஎம்-1வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.