கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருத்தலைத் தவிர்த்து, குறைந்தது மூன்று அடி தூரம் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் இருமல், தும்மலின்போது வைரஸ் கிருமி அருகில் இருப்போர் மீது வைரஸ் கிருமி பரவாமல் தடுக்க முடியும்.
இந்நிலையில், உழவர் சந்தைகள் உள்ளிட்ட அனைத்து வார, தினசரி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று காய்கறிகளை வாங்கி வருகின்றனர். இதன்மூலம் நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, குறுகலான இடங்கள் மற்றும் மூன்று அடி தூர இடைவெளியில் நின்று காய்கறி வாங்க முடியாத நிலையில் உள்ள அனைத்து வகையான காய்கறி சந்தைகளையும், பெரிய அளவிலான பெரிய காய்கறி கடைகளையும் விசாலமான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் குறுகலான இடங்களில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள் மற்றும் இதர காய்கறி சந்தைகளை ஒரே நாளில் விசாலமான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
சேலம் மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகிய இரண்டு சந்தைகளும் இனி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் செயல்படும்.
அஸ்தம்பட்டி உழவர் சந்தை, அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள முனியப்பன் கோயில் வளாகத்தில் செயல்படும். அம்மாபேட்டை உழவர் சந்தை, அருகில் உள்ள காமராஜர் காலனி முதல் தெருவில் செயல்படும். தாதகாப்பட்டி உழவர் சந்தை, இனி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும்.
எடப்பாடியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், இளம்பிள்ளை உழவர் சந்தையானது இளம்பிள்ளை வாரச்சந்தை பகுதியிலும், ஆத்தூர் உழவர் சந்தையானது ஆத்தூர் புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் செயல்படும். சனிக்கிழமை முதல் (மார்ச் 28) அறிவிக்கப்பட்ட புதிய இடங்களில் உழவர் சந்தைகள், இதர காய்கறி சந்தைகள் இயங்கும்.
அதேநேரம், மேட்டூர் உழவர் சந்தை, ஜலகண்டாபுரம் உழவர் சந்தை, ஆட்டையாம்பட்டி உழவர் சந்தை, தம்மம்பட்டி உழவர் சந்தை ஆகியவை ஏற்கனவே விசாலமான இடங்களில் உள்ளதால் அதே இடத்தில் தொடர்ந்து செயல்படும். காய்கறி வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 3 அடி தொலைவில் நிற்கும் வகையில் கட்டங்கள் வரைந்து வைக்கப்பட்டு உள்ளன. அந்தந்த கட்டத்திற்குள்தான் வாடிக்கையாளர்கள் நின்று காய்கறிகளை வாங்க வேண்டும்.
இந்நிலையில், காய்கறி சந்தைகள் இடமாற்றம் செய்யும் பணிகளை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டார். அஸ்தம்பட்டி உழவர் சந்தை, அருகில் உள்ள முனியப்பன் கோயில் வளாகத்திற்கு மாற்றப்படும் பணிகளைப் பார்வையிட்ட அவர் கூறுகையில், ''வரும்முன் காப்போம் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சமூக விலகலை முழுமையாகக் கடைபிடித்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்கி பயன்பெற வேண்டும்,'' என்றார்.