சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் தேர் வீதி அருகே செயல்பட்டு வந்த வஉசி பூ மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுவதால், அந்த மார்க்கெட் போஸ் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு 225 கடைகள் கட்டப்பட்டன. பெரிய கடைகளுக்கு 20 ரூபாய், சிறிய கடைகளுக்கு 15 ரூபாய் வீதம் தினசரி சுங்கம் வசூலிக்கும் பணிகளைத் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது.
டெண்டர் எடுத்த தரப்பினரோ, மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்ததை விட கூடுதல் சுங்கம் வசூலித்தனர். அதற்குரிய ரசீதும் தருவதில்லை என்ற புகார்கள் கிளம்பின. அதுமட்டுமின்றி, கடைகளை பூ வியாபாரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பகடியாக விற்பனை செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குத்தகையை ரத்து செய்தது. ஒப்பந்ததாரர்கள் தரப்போ, உடனடியாக அதற்குத் தடை ஆணை பெற்றது.
இருப்பினும், சுங்கக் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சுங்கம் வசூல் பணியை ஒப்பந்ததாரர் ஜன.21- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் ஜன. 25- ஆம் தேதி வந்தது.
அப்போது நீதிபதி புகழேந்தி, சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் சுங்கக் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகமே ஜன. 26- ஆம் தேதி முதல் பிப். 22- ஆம் தேதி வரை நேரடியாக வசூலிக்க வேண்டும். வசூல் விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து, சேலம் மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) முதல் வஉசி பூ மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.