சேலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சேலம் மாநகராட்சி, இரண்டே நாளில் 2.84 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே, தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படியும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் செயல்பட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடைகள், வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் செயல்படுகிறதா?, உரிமையாளர்கள், பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பது உள்ளிட்ட அரசின் ஒவ்வொரு விதிகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநகராட்சி சார்பில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.
சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஜூலை 13, 14 ஆகிய இரு நாள்களிலும் மாநகர பகுதிகளில் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். சமூக இடைவெளி பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதது, குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் கடைகள், நிறுவனங்கள் இயங்கியது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் மேற்கண்ட விதிமீறல் குற்றத்திற்காக 722 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து 2.84 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கூறியுள்ளதாவது: சேலம் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் தினமும் ஆய்வு மேற்கொள்வார்கள். உணவகம், பேக்கரி, தேநீர் விடுதிகள், பிற அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் செயல்படக்கூடாது.
அவ்வாறு கால வரம்பை மீறி செயல்பட்டாலோ, கடைகள், நிறுவனங்கள் முன்பு கைகழுவுவதற்கான வசதிகள், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலோ, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பிற்பற்றாமல் இருந்தாலும் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் கூடுதலாக வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் கடைகளுக்குள் அனுமதிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மட்டுமின்றி சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு ஆணையர் சதீஷ் கூறியுள்ளார்.