சேலத்தில் இரவு 7.30 மணி முதல் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சேலத்தில் இன்று காலை முதல் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது என்றாலும் மாலை நேரம் ஆக ஆக வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இரவு 7.30 மணியளவில் சேலத்தில் பரவலாக லேசான மழை பெய்யத் தொடங்கியது. 15 நிமிடங்களில் இந்த மழை ஓய்ந்தது. பின்னர், இரவு 8 மணியளவில் மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை அடுத்த ஐந்து நிமிடத்தில் கனமழையாக உருவெடுத்தது.
சேலம் மாநகரில் சூரமங்கலம், 5 சாலை, 4 சாலை, முள்ளுவாடி கேட், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, நாராயணநகர், சேலம் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் மழை நீர் தேங்கி நின்றதும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. எனினும், இந்த மழை சேலம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.