சேலம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி (இ-பாஸ்) பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுநோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன. எனினும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் மூலம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 22) வரை மொத்தம் 352 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நோய்த்தொற்று பாதித்தவர்களில் 150 பேர் வெளியில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் கணிசமானோர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வருவோர், கண்டிப்பாக இ-பாஸ் அனுமதி பெற்று வர வேண்டும் என்றும், அனுமதியின்றி வருவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும மாவட்ட ஆட்சியர் ராமன் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
ஆனாலும், பலர் திருட்டுத்தனமாக சேலம் மாவட்டத்திற்குள் நுழைவது நடந்து வருகிறது. அவ்வாறு திருட்டுத்தனமாக வெளியே இருந்து சேலம் மாவட்டத்திற்குள் நுழைந்த மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத 27 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 3 பேர், சிவதாபுரத்தைச் சேர்ந்த 4 பேர், பெரமனூரைச் சேர்ந்த ஒருவர், அம்மாபேட்டை மணடலத்திற்கு உட்பட்ட இரண்டாவது அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அங்கம்மாள் தெருவைச் சேர்ந்த ஒருவர், சேர்மன் சடகோபன் தெருவைச் சேர்ந்த ஒருவர், முத்துசாமி தெருவைச் சேர்ந்த ஒருவர், வித்யா நகர் 8ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''வெளி இடங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்குள் நுழைவோர் குறித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை அலுவலர்களின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். உரிய அனுமதியின்றி வருவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.