குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) நடந்தது. சேலத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். சேலம் கோட்டை பகுதியில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
திமுக தொண்டர்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்கள், இளைஞர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். கோட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று இச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. மத்திய மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதேபோல், சேலம் மேற்கு மாவட்டத்தில் இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே, கையெழுத்து இயக்கம் தொடங்கியது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம், கையெ-ழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஆட்டையாம்பட்டியில் கையெழுத்து தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.