சேலம் மாற்றுத்திறனாளி காவல் மரண வழக்கை விசாரித்த உண்மை கண்டறியும் குழுவினர், அவரைச் சிறைக்குள் வைத்து காவலர்கள் தாக்கியிருப்பதாகப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளி. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நடந்த ஒரு திருட்டு வழக்கில் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.
திடீரென்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காவல்துறையினர் அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் பிரபாகரன் உயிரிழந்தார் என்றும், காவல் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் போராடினர்.
இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்ஐ மற்றும் ஒரு காவலர், புதுச்சத்திரம் பெண் எஸ்ஐ ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதன்பிறகே, பிரபாகரனின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
இதற்கிடையே, பிரபாகரன் மரணம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவருடைய குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
இந்நிலையில், பிரபாகரன் மரணம் குறித்து மக்கள் கண்காணிப்பகம் மற்றும் காவல் மரணங்களுக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் உண்மை கண்டறியும் குழுவினர் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஊடகத்தினரிடம் கூறியது:
"உயிரிழந்த பிரபாகரனுக்குத் திருட்டு வழக்கில் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவரைச் சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்து எஸ்ஐ சந்திரன் விசாரித்தது, காவல் ஆய்வாளர் சதீசுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. பிரபாகரனைக் கடத்திச்சென்று விட்டார்கள் என ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக அவரை ஜன. 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அப்போது பிரபாகரனின் மூக்கில் காயம் இல்லை. ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும்போது அவருடைய மூக்கில் ரத்த காயம் இருந்துள்ளது. அதனால் சிறையில் அவரைத் தாக்கியிருப்பது தெரிகிறது. இதனால் நாமக்கல் கிளைச்சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்சி., எஸ்டி., சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த காவல்துறையினர் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ஆசிர்வாதம் கூறினார். பேட்டியின்போது, வழக்கறிஞர்கள் தமயந்தி, அசோகன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.