திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் இளைய மகன் எ.வ.கம்பன். இவர் மாநில தடகள சங்கத்தின் மாநில துணை தலைவராக உள்ளார். சில ஆண்டுகளாகவே கட்சியில் சாதாரண உறுப்பினராக இணைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியாற்றச்சொல்லி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் அனுப்பிவைக்கப்பட்டு பணிகள் செய்தார்.
தொடர்ந்தார்போல் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதே கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட கழகத்தின் சார்பில் அறிவித்து அனுப்பிவைக்கப்பட்டார். அதிமுகவின் ஜாம்பவானாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அதிமுக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிட்டிங் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தல் பணியாற்றினார். கலசப்பாக்கத்தில் சேர்மன், துணை சேர்மன் பதவியை திமுக பிடிப்பது கடினம் எனச்சொல்லப்பட்ட நிலையில் அந்த அதிமுகவின் தடைகளை மீறி கலசப்பாக்கம் ஒன்றியம், புதுப்பாளையம் ஒன்றியத்தின் சேர்மன் பதவிகளை திமுக பிடித்தது. துணை தலைவர் பதவிகளையும் திமுக பிடித்தது. இந்த வெற்றியால் கட்சியில் ஒருதரப்பு கம்பன் தான் கலசப்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் என தங்களுக்குள் பேசிவந்தனர்.
இந்நிலையில் எ.வ.கம்பனுக்கு, பிப்ரவரி 22ந்தேதி பிறந்தநாள். திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கட்சி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் கம்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் கட்சியில் ஒருதரப்பு பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை சமூக வளைத்தளங்களான முகநூல், வாட்ஸ்அப்களில் வாழ்த்து செய்தியை பதிவிட்டு வருகின்றனர். அதில் வருங்கால கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுக்குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர், கம்பனுக்கு கட்சியில் எந்த பதவியும் கிடையாது, அவர் சாதாரண உறுப்பினர் தான். அவருக்கு கட்சியினர் தரும் மரியாதை மா.செவின் மகன் என்பதற்காக தான். கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்க தன் மகனை கலசப்பாக்கம் தொகுதியின் கட்சி வேலைகளை பார்க்கச்சொல்லி பொறுப்பாளர் எனச்சொல்லி அனுப்பிவைத்தார். இது அதிகாரபூர்வ பதவி கிடையாது என்றாலும் அப்போதே முனுமுனுப்பு எழுந்தது. யாரும் வெளிப்படையாக பேசவில்லை. எம்.பி தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்று தந்தார், உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சேர்மன் பதவியை பிடிக்க உதவி செய்தார், அதனையெல்லாம் பாராட்டுகிறோம். அதற்காக அவரை எம்.எல்.ஏ வேட்பாளராக விளம்பரப்படுத்துவதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.
நாங்கயெல்லாம், கட்சி வேலையே செய்யலயா, அவருக்கு மட்டும் ஏன் இப்படி திட்டமிட்டு அவரை தவிர அந்த தொகுதியில் யாரும் இல்லாத மாதிரி பில்டப் தர்றாங்க. நாங்களும் தான் எங்களுக்கு தரப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை வாங்கி தந்திருக்கோம், காலம் காலமா கட்சிக்காக உழைச்சி, ஒரு பதவிக்கு வர்றது எவ்வளவு செலவு செய்துயிருக்கோம் தெரியுமா?, கூட்டம் நடத்தறது, தலைவர்களை வரவேற்க விளம்பரம் தர்றது, கட்சியினருக்கு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கறதுன்னு எவ்வளவு செலவு செய்து இந்த இடத்துக்கு வந்துயிருக்கோம்.
கட்சியில் எந்த பதவியும் இல்லாம, கட்சிக்காக பத்து பைசா செலவு செய்யாம, அவுங்க அப்பா செலவு செய்யறதையும், கட்சியில் அவர் பதவியில் இருக்கறதையும், மேலிடத்தில் உள்ள செல்வாக்கை வச்சிக்கிட்டு இப்படி எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்படறது எந்த விதத்தில் சரி என என கேள்வி எழுப்பினர்கள். முதல்ல அவர் கட்சி பதவிக்கு வரட்டும், இன்னும் உழைக்கட்டும் அதுக்கப்பறம் சீட் கேட்கட்டும், தலைவர் ஸ்டாலின் பரிசீலனை செய்யட்டும் என்கிறார்கள்.
கம்பன் தரப்போ, ஆர்வ மிகுதியில் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் அப்படின்னு போட்டுட்டாங்க, அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் எனக்கேட்கிறார்கள்.