கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் மாநகருக்குள் யாரேனும் வந்து தங்கியிருந்தால், அதுபற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாத கடைகள், நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகர பகுதிகளுக்கு வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 27.4.2020 முதல் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வருகை தரக்கூடியவர்களை மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அவர்களை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே மாநகர பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி மாநகர பகுதிகளுக்குள் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களைக் கண்டறிய மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 4 மண்டலங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் களஆய்வு செய்து, உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்தும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். பரிசோதனையின் முடிவில் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை 14 நாள்கள் அவர்களுடைய வீடுகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் முன் அனுமதியின்றி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் வருகை தருபவர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் மீதும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.
எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பங்களிலோ அல்லது தங்கள் வசிக்கும் பகுதிகளிலோ அரசின் முன் அனுமதியின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நபர்கள் இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலகங்களிலோ, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரிடமோ தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு மாநகராட்சி ஆணையர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.