கலைஞரின் 96-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உற்சாகமாக திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்துள்ள கலைஞரின் பிறந்த நாள் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரின் பிறந்தநாள் நிகழ்வு அறிவாலயத்திலும் கலைஞரின் நினைவிடத்திலும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்ட நிலையில், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில், கலைஞரின் திரு உருவ படத்தை சத்தியமூர்த்திபவனில் வைத்து பூக்கள் தூவி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், பவனில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் தமிழக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஆர். தாமோதரன் , சர்க்கிள் தலைவர்கள் நாச்சிக்குளம் சரவணன், சைதை முத்தமிழ், மாங்கா சேகர் மற்றும் ரகுசந்தர் ,சிவக்குமார் ,தரமணி சீனு,பட்டினம்பாக்கம் பன்னீர் , புனிதவள்ளி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடினர்.
சத்தியமூர்த்தி பவனில் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது, " காங்கிரஸுடன் எம்.ஜி.ஆர். கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், ஒரு போதும் சத்தியமூர்த்திபவனுக்கு எம்.ஜி.ஆர். வந்ததில்லை. ஆனால், அந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை சத்தியமூர்த்திபவனில் கொண்டாடினார் எங்களின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு. எம்.ஜி.ஆர். படம் வைத்து அவருக்கு மரியாதையும் செய்தார்.
காங்கிரஸ் அலுவலகத்துக்கு வராத எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை பவனில் கொண்டாடப்பட்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சியின் போது, சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்து, மறைந்த தலைவர் ராஜிவ் காந்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஐ.டி.காரிடார் சாலைக்கு அவரது பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர். தற்போதும் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகள்.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கும் திமுகதான் காரணம். இதையெல்லம் மனதில் கொண்டுதான், கலைஞரின் பிறந்த நாளை சத்தியமூர்த்திபவனில் கொண்டாடினோம் " என்கிறார் உணர்வுபூர்வமாக கராத்தே தியாகராஜன். பவனில் நடந்த இந்த நிகழ்வு காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,திமுக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.