தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்தால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படி, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா அறிவுறுத்தி உள்ளார்.
சேலம் மாநகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்து தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுடன் சேலம் மாநகர தெற்கு சரக காவல்துறை துணை ஆணையர் லாவண்யா ஜூலை 5- ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம், காவலர் சமுதாயக் கூடத்தில் நடந்தது.
தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், நிர்வாகிகளுக்கு துணை ஆணையர் அறிவுரைகள் வழங்கினார். அவர் கூறியதாவது, "தங்கும் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் சரியான பெயர், அவர்களின் முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கூறும் தகவல்களை அவர்களின் ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றின் மூலம் உறுதிப்படுத்தி, பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
விடுதிக்கு வரும் நபர்கள், அறை எடுத்துள்ள நபர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். சேலம் மாநகரில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுப்பதிலும் தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் தேவை." இவ்வாறு துணை ஆணையர் லாவண்யா பேசினார்.
இக்கூட்டத்தில், காவல்துறை உதவி ஆணையர்கள் வெங்கடேசன், அசோகன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.