சேலத்தில் லஞ்சம், ஊழல் மூலம் சொத்துகளைக் குவித்த வனத்துறை அதிகாரிக்கும், அவருடைய மனைவிக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முறைகேடாக வாங்கிக் குவித்த சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் சேலம் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 61). இவருடைய மனைவி தேன்மொழி (வயது 55). வாழப்பாடி சரகத்தில் வனவராகப் பணியாற்றி வந்தார் ராஜாமணி. அவர் தன்னுடைய பணிக்காலத்தில், கடந்த 2001ஆம் ஆண்டு, லஞ்சம், ஊழல் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் சில இடங்களில் வீட்டு மனைகள் வாங்கியிருப்பதும், அவற்றைத் தன் மனைவி தேன்மொழி மீது கிரையம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அந்த சொத்துகளின் அப்போதைய மதிப்பு 24 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, சேலம் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, நேற்று முன்தினம் (மார்ச் 31) தீர்ப்பளித்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்த முன்னாள் வனத்துறை அதிகாரி ராஜாமணி, அவருடைய மனைவி தேன்மொழி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முறைகேடாக வாங்கி குவித்த சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜாமணியை ஆத்தூர் கிளைச்சிறையிலும், தேன்மொழியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.