சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த எட்டு செவிலியர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து, அம்மருத்துவமனைகளுக்கு உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 2,200க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை 25 பேர் கரோனா நோய்த் தொற்றால் பலியாகி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டியில் இயங்கி வரும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 8 செவிலியர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, மற்றவர்களுக்கும் நோய்ப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்விரு மருத்துவமனைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மூடி 'சீல்' வைத்தது. மருத்துவமனை வளாகத்தின் உள்ளும், புறமும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் வருவதைத் தவிர்க்கும் நோக்கில் அவற்றுக்கு மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட செவிலியர்களிடம் கடந்த ஒரு வாரமாக தொடர்பில் இருந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலோ, வெளி மாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு யாராவது வந்திருந்தாலோ அதுபற்றி உடனடியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அல்லது மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,'' என்றனர்.