அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமார்-ஐஸ்வர்யா தம்பதியினரின் மகள் பிருந்தா (10), மகன் கிரிதரன் (8) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் குளிக்க சென்ற நிலையில் மூழ்கினர். கிராம மக்களால் மீட்கப்பட்டு இருவரும் பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள செந்துறை அரசு மருத்துவமனைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர். இங்கே இருந்த செவிலியர்களே சிகிச்சை மேற்கொண்டு அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செந்துறை அரசு பொது மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நியமித்து செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விபத்து மற்றும் அவசர கால நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை மேற்கொண்டு அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று இப்பகுதி மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.