சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று அபாயம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறி பொதுவெளியில் நடமாடுவோர் மீது காவல்துறையினர் மூலம் என்னதான் கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு என்பது இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது சனிக்கிழமை (மே 2) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
மே 2ம் தேதி மட்டும் மாவட்டம் முழுவதும் 322 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 6770 பேருக்கு சளி மாதிரிகள் சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஆண்கள்; 11 பேர் பெண்கள். சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்று அபாயம் உள்ள பகுதிகளாக மொத்தம் 11 இடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன.
இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் இந்தோனேசியாவில் வந்த முஸ்லிம் மத போதகர்கள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டி உள்பட மொத்தம் 5 பேர், மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6, தாரமங்கலம் 2, தம்மம்பட்டி 3, இடைப்பாடி, கருமந்துறை, சேலம் ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 1, சேலம் புறநகர், ஓமலூர் பகுதிகளில் தலா 1 மற்றும் வெளிமாநிலத்திற்குச் சென்று திரும்பிய ஒருவர் ஆகியோருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 11 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 33 பேர்களில், 4 இந்தோனேசியர்கள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டி ஒருவர் உள்பட இதுவரை 24 பேர் நோய் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் 9 பேருக்கு தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தகவலை சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.