சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று கருதப்படும் இளங்கோவன் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
வெளிப்படையான தேர்தல் நடத்தாமல் இளங்கோவனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும், அந்த பதவி வகிக்கும் அளவுக்கு இளங்கோவனுக்கு தகுதி இல்லை என்றும் சேலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வையாபுரி, சில நாள்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கினார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக புகைச்சல் கிளம்பிய விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இளங்கோவனின் ஆதரவாளரும், சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான ஏ.வி.ராஜூ, வையாபுரிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு வையாபுரி திடீரென்று எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?
ஏ.வி.ராஜூ: வையாபுரி, தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் இப்படி பேசியிருக்கலாம். அவருடைய மனைவி மல்லிகாவுக்கு வீரபாண்டி தொகுதியில் எம்எல்ஏ சீட் கேட்டார். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம். இளங்கோவனுக்கு தகுதி இல்லை என்று சொல்ல வையாபுரிக்கு எந்த அருகதையும் இல்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய நான்கு தொகுதிகளை பொறுப்பேற்று, எடப்பாடியார் ஆசியுடன் நான்கு தொகுதிகளிலும் கட்சியை வெற்றிபெறச் செய்திருக்கிறார். எந்த வகையில் இளங்கோவன் தப்பு செய்திருக்கிறார்? அவரைப் போல சின்சியர் ஒர்க்கர் யாரும் கிடையாது.
தகுதி உடையவர்கள் அவரை விமர்சிக்கலாம். வையாபுரி போன்றவர்களுக்கு விமர்சிக்க தகுதி இல்லை.
நீங்கள் இளங்கோவனின் ஆதரவாளர் என்பதால் இப்படி சொல்கிறீர்களா?
ஏ.வி.ராஜூ: நான் இளங்கோவன் ஆதரவாளர் இல்லை. கட்சியின் தலைமை யாரை செயலாளராக நியமிக்கிறதோ அவருக்கு கட்டுப்படுவேன். கட்சியின் உண்மை விசுவாசி. அவ்வளவுதான். இளங்கோவனை விட தகுதியான மாவட்ட செயலாளரை போடணும்னா... வையாபுரியையா போட முடியும்?
சேலம் ஒன்றியக்குழு தலைவர் மல்லிகா வையாபுரியை பதவியை நீக்க நீங்களும், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலமும் சதி செய்வதாக கூறுகிறாரே?
அவர் வேண்டுமானால் அப்படி சொல்லலாம். இதுவரை நான் சேலம் யூனியன் ஆபீசுக்குக் கூட போனதில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.
ஒன்றிய செயலாளர் பதவிக்காக நானோ அல்லது பிறரோ யாரிடமும் பணம் வாங்கவில்லை. அவரை ஒன்றிய செயலாளராக நியமிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்? என்பதை சொல்லச் சொல்லுங்கள். ப.மோகன் அமைச்சராக இருந்தபோது, அவர் பொண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நாங்கள்தான் காலேஜ் ஃபீஸ் கட்டினோம்.
கவுன்சிலர் வள்ளி முருகனை ஆதரவு வாபஸ் பெறுமாறு நாங்கள் எதுவும் சொல்லவில்லை. உண்மை நிலவரம் என்ன என்பது வள்ளி முருகன் பேசிய ஆடியோ ரெக்கார்டு என்னிடம் உள்ளது. அவர் கட்சியை விட்டுப் போகக்கூடாது என்று தடுத்தவன் நான்தான்.
வையாபுரி, இன்றைக்கு பெட்ரோல் பங்க், பல இடங்களில் நிலங்களை வாங்கி குவித்திருக்கிறார். இந்த சொத்தெல்லாம் எங்கிருந்து, எப்படி வந்தது? என்று சொல்லச் சொல்லுங்கள்.
வையாபுரின் திடீர் பாய்ச்சலுக்கு என்னதான் காரணம்?
ஏ.வி.ராஜூ: ஆண்டிப்பட்டி வார்டில் வையாபுரி என்ற கவுன்சிலர் இறந்து விட்டார். (இறந்தவர் பெயரும் வையாபுரிதான்). இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அதில் ஆளுங்கட்சி ஜெயித்து விட்டால் எப்படியும் அவருடைய மனைவியின் பதவி பறிபோய் விடும். இப்போது வரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஆதரவுடன் தான் மல்லிகா தலைவராக இருக்கிறார். வரும் தேர்தலில், திமுக ஜெயித்தால், கம்யூனிஸ்ட் கவுன்சிலரும் ஆளும் கட்சிக்குதான் ஆதரவு தெரிவிப்பார்.
அதனால் மனைவியின் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். திமுகவில் சேர்ந்தால் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கருதுகிறார். இதற்காக திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கு.
செட்டிச்சாவடிதான் என்னுடைய சொந்த ஊர். அந்த ஊரிலேயே காண்ட்ராக்ட் பணிகளை திமுககாரர்களுக்குதான் கொடுத்திருக்கிறார்.
சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு செல்வபிரகாசம் என்பவரை கொண்டு வர சதி நடப்பதாகவும் கூறுகிறாரே?
இறந்துபோன முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன்தான் செல்வபிரகாசம். கிழக்கு ஒன்றியத்தில் நடக்கும் எந்த ஒரு நல்லது, கெட்டதுக்கும் நான் போனதில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் செல்வபிரகாசத்தை சந்தித்துப் பேச வேண்டும்?
உங்களாலும், இளங்கோவனாலும் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறுகிறார்?
ஏ.வி.ராஜூ: ஏங்க... நான் ஒரு சாதாரண ஆளுங்க. அச்சுறுத்தும் அளவுக்கு பெரிய ஆள் இல்லீங்க. உடம்பு சரியில்லாததால் ஆஸ்பத்திரி, வீடுனு சுத்திட்டு இருக்கேன். இளங்கோவனுக்கு கட்சிப்பணிகள் நிறைய இருக்கு. மற்றபடி அவரும் சாதாரண ஆள்தான்.
இளங்கோவன் சாதாரண ஆளா? அவர் வீட்டில் ரெய்டெல்லாம் நடந்ததே?
ஏ.வி.ராஜூ: என் வீட்டில்கூடதான் ரெய்டு நடக்கலாம். சாதாரணமாக என் வீட்டில், அவசர செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வெச்சிருக்க மாட்டேனா? அவர் வீட்டில் ரெய்டு நடத்தி என்ன எடுத்தார்கள்?
எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று இளங்கோவனை சொல்கிறார்களே?
ஏ.வி.ராஜூ: கட்சி மேலிடம் ஒரு சில பிரச்னைகளை சிலரிடம் தனியாக பேசுவார்கள். அதற்காக அவர் நிழலா? இதே வையாபுரியிடமும் எடப்பாடியார் தனியாக பேசியிருக்கிறார். அதற்காக அவர் நிழலா? இளங்கோவன், எடப்பாடியாரின் நிழல் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் கட்சிக்கு விசுவாசி. அம்மா இருக்கும்போதே அவருக்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவி வழங்கினார். பனமரத்துப்பட்டி தொகுதியில் சீட் கொடுத்திருந்தார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை விட்டு திடீரென்று எடப்பாடி பழனிசாமி விலகிப் போகக் காரணம் என்ன?
ஏ.வி.ராஜூ: அவர் பதவியை விட்டு விலகிப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடியார் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, இளங்கோவனும் மனுத்தாக்கல் செய்தார். இணை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் புறநகர் மா.செ., பதவியை இளங்கோவனுக்கு வழங்கியிருக்கலாம்.
அப்படியெனில், எடப்பாடியாருக்கு இளங்கோவன் போட்டியாளரா?
போட்டியாளர் அல்ல. எதிர்க்கட்சியாக அதிக வேலைகள் இருப்பதால் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இளங்கோவனுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம். என்றாலும் மேல்மட்ட பாலிடிக்ஸ் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது.
இளங்கோவன் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால் அவரை எதிர்த்து 5 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருந்ததாக சொல்கிறார்களே?
அப்படி என்று வையாபுரிதான் சொல்கிறார். யார் யார் வேட்புமனுத் தாக்கல் செய்ய தயாராக இருந்தார்கள் என்று அவரையே சொல்லச் சொல்லுங்கள்.
வையாபுரி தன் மனைவியின் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியெல்லாம் பேசுகிறார். சும்மா லொடலொடனு ஒரு டிவிஎஸ் 50 ஓட்டிக்கிட்டு இருந்தார். அப்பப்ப பத்து அஞ்சு கொடுத்தவன் இந்த ராஜூதான். பேச ஆரம்பிச்சா நிறைய பேசிவிடுவேன். அவருடைய ஆரம்ப காலத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கச் சொல்லுங்க.
ஆண்டிப்பட்டி வையாபுரி இறந்து விட்டதை அடுத்து, அந்த வார்டில் அவரை போட்டியிடச் சொன்னோம். அவர் மறுத்துவிட்டார். அவர், திமுகவில் இணைவதற்கு தயாராகிவிட்டார்.
இலவச திருமணம் என்ற பெயரில் நீங்கள் வசூல் வேட்டை நடத்தியதாக சொல்கிறாரே?
ஏ.வி.ராஜூ: அந்த ரிக்கார்டு எலலாம் அவரிடம்தான் இருக்கு. நிழல் நிழல்னு இளங்கோவனை சொல்றீங்களே... என்னுடைய உண்மையாக நிழலாக இருந்தது வையாபுரிதான். அவரிடம் கேட்டால் உண்மையச் சொல்லுவார்.
இவ்வாறு ஏ.வி.ராஜூ கூறினார்.