சேலம் 4 ரோடு அருகே பிரபலமான குழந்தை ஏசு பேராலயம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்ய வந்து செல்வார்கள். பேராலய வளாகத்திலேயே புத்தக நிலையம், பாதிரியாரின் குடியிருப்பும் உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த சர்ச்சுக்கு வழக்கத்தைவிட அதிகமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 21, 2018) சர்ச்சுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நான்கு உண்டியல்களை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சர்ச் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் சேலம் பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சர்ச் வளாகத்தில் 34 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, பாதிரியார் ஜான்ஜோசப் அறையில் இருக்கிறது. அவருடைய அலுவலக அறை ஜன்னல் கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து, அதன் வழியாக அறைக்குள் நுழை ந்துள்ளனர்.
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் மெயின் பிளாக்கை உருவி, அவற்றை செயலழிக்கச் செய்துள்ளனர். பின்னர் அந்த அறையின் பிரதான கதவின் பூட்டுப்போடும் கொண்டியை கம்பியால் நெம்பி, அதன் வழியாக வெளியே வந்துள்ளனர்.
அடுத்ததாக மர்ம நபர்கள், பாதிரியார் குடியிருப்பு அருகே உள்ள புத்தக நிலையத்திற்குள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு கல்லா பெட்டியை தேடிப்பார்த்த அந்த கும்பல், அதிலிருந்த 300 ரூபாயை எடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பல், சர்ச்சின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்துள்ளனர். அதன்வழியாக உள்ளே நுழைந்து, அங்கிருந்த நான்கு உண்டியல்களின் பூட்டுகளையும் உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சர்ச்சில் ஏசு கிரிஸ்து மற்றும் சர்ச்சின் உள் பகுதிகளில் இரவு 1.30 மணி வரை ஆலங்கார வேலைகள் நடந்து வந்துள்ளன. அதன்பிறகே மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசயை காட்டியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சர்ச்சின் இரவுக்காவலர் அரோக்கியசாமி, மூன்று ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். அதிகாலை 3.30 மணியளவில் சர்ச் வளாகத்தில் கண்காணிப்பில் இருந்தபோது, சர்ச்சின் பின்பகுதியில் உள்ள நுழைவுவாயில் கதவை ஒருவர் தாண்டி குதிக்கும் சத்தம் கேட்டு உஷாரானார். அங்கே சென்று பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் சென்றதைக் கண்டு, அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். மர்ம ஆசாமி கல்லூரி மாணவரைப்போல் 'ஷோல்டர் பேக்' ஒன்றை மாட்டியிருந்ததாக ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) உண்டியல் திறக்கப்பட உள்ள நிலையில், திட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இந்த சர்ச்சுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள்தான், உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.