சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 33 ரவுடிகளை காவல்துறையினர் ஒரே இரவில் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலும், பொது அமைதியைக் காக்கும் வகையிலும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்கின்றனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும், சரித்திர பதிவேடு பராமரிக்கப்படும் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க தனிப்படை அமைத்து, ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 20ம் தேதி இரவில் சேலம் மாநகரம் முழுவதும் ரவுடிகளை களையெடுக்கும் வகையில் சிறப்பு வேட்டையில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த வேட்டையில், ஜூன் 20ம் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை 33 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. ரவுடிகள் அனைவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து கும்பலைச் சேர்ந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.